Wednesday, August 26, 2015

கர்ம வீரர் காமராசர் கண்ணீரால் நிறைந்த நிஜம்

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.
கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.
நேற்று வெளிவந்த தீர்ப்பு என்னை மிகவும் பாதித்தது.
பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக
இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர்.தவறே செய்யக்கூடாது.
நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும்.
இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது.
அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்...
“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ’
ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு
100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது
முதல்வர் காமராசர் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று
அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.
நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா.
நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே...
ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.
சமைக்கலயாமே....உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்..
நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது.
‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்தது கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழை
மக்களுக்காகவே இருந்தார்....
இனி இதுபோல முதல்வர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தோடு...

Thursday, August 6, 2015

காமராசரின் ஆட்சி காலம்

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.
அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும்
மாணவர்கள் பட்டினியாக இருக்கக்
கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம்
தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கி தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்ற போது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.
மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில
விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த
இந்தச் சாதனைகளில்...
இந்தியாவிலேயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர்
செய்தது சாதனையா..?
இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?

Tuesday, August 4, 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள் ..

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்


1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..