சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னைப்பாசத்தை துறந்தவர் அவர். தன் அம்மா அருகில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். தன் அம்மா இருந்த வீட்டிற்கு விதிகளை மீறி குழாய் இணைப்பு கொடுத்த பொழுது, அதைத் தானே பிடுங்கி எறிந்து விட்டு ,"நான் பணம் கட்டி அனுமதி கேட்டேனா? இதற்கு வரி கட்ட எனக்கு எங்க வக்கு இருக்கு?"என்று கேட்டார் அவர். வெங்கட்ராமன் இவரின் அம்மாவுக்கு வாங்கித் தந்திருந்த மின்விசிறியை கழற்றி கொடுத்து அனுப்பிவிட்டார் இவர் !
ராஜாஜியின் ஆட்சி குலக்கல்வி முறையை கொண்டு வர முயன்றதால் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. ராஜாஜி பதவி விலகினார். அவருக்கு பின் தமிழகத்தின் முதல்வர் ஆன காமராஜர் அந்த அமைச்சரவையை அப்படியே வைத்துக்கொண்டார்.
ராஜாஜி நிதிப்பற்றாக்குறை என்று மூடிய ஆறாயிரம் பள்ளிகளை காமராஜர் திறந்தார் . பதினான்காயிரம் பள்ளிகள் கூடுதலாகவும் திறக்கப்பட்டன. பிள்ளைகளுக்கு பசியாற்ற கூடுதல் வரி போடவும்,கையேந்தவும் தயங்க மாட்டேன் என்று கம்பீரமாகச் சொன்னார் கர்மவீரர். நிக்ஸன் காமராஜரை பார்க்க விரும்பிய பொழுது முடியாது என்று மறுத்து அவர் சொன்ன காரணம் ," நம்ம அண்ணாவை பார்க்க நேரமில்லைன்னு சொன்னவர் தானே அவரு? அவரை நான் ஏன் பார்க்கணும்னேன் !"
யாரைப்பற்றியும் மேடையில் அவச்சொல் சொல்லி பேச விடமாட்டார். அவரின் கரங்கள் அப்படி பேசுபவரை செல்லமாக பதம் பார்க்கும். தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
தனக்கு ஆங்காங்கே தரப்பட்ட சில்லறைகளை கூட தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் தி ஹிந்து கஸ்தூரி ரங்கனிடம் தந்து வைத்திருந்தார். அவை சேர்ந்ததும் அதைக்கொண்டு கட்சியின் பெயரில் வாங்கிய இடம் தான் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம். அதையும் தன் பெயரில் பதிவு செய்துகொள்ள மறுத்தவர் அவர்.
காமராஜர் திமுகவுக்கு எதிராக மவுன ஊர்வலம் நடத்திய பொழுது இரண்டு தொண்டர்கள் மீது கல் பட்டு ரத்தம் வடிய மேடைக்கு அவர்களை கொண்டு வந்தார்கள். காமராஜர் கடும் கோபத்தோடு ,"இங்கே என்ன நாடகமா நடக்குது ? அவங்களை கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேருங்கனேன்" என்று சொன்னார். பொய்யான ஊழல் குற்றச்சாட்டை அவர் மீது வைத்த பொழுது ,"எனக்கு யானைக்கால் வியாதி அப்படின்னு அவனவன் சொன்னா நான் என் காலை தூக்கியா காமிச்சுக்கிட்டு இருக்க முடியும்னேன்!" என்றார். சட்டசபையில் எப்படி கச்சிதமாக பேச வேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்தவர் அவர். தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி கதை அவரில் இருந்தே துவங்குகிறது.
காமராஜர் தோற்ற பொழுது எதிர்கட்சிகளின் மீது பழி போடவில்லை . "இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!" என்றவரிடம், ரஷ்ய மை தடவித்தான் தேர்தலில் தோற்றுப்போனோம் என்று தொண்டர்கள் சொன்ன பொழுது "மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வில்லை அவ்ளோதான். !" என்று இயல்பாகச் சொன்னார்.
காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை இரவு மதுரையில் விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்து. மின்சாரம் இல்லாமல் போகவே முதல்வர் "கட்டிலைத் தூக்கி மரத்தடியில் போடு" என்று சொல்லிவிட்டு கட்டிலைப்போட்டதும் போய் படுத்துக்கொண்டார். . கட்டில் அருகே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு வந்து நின்றார். " நீ ஏன் இங்கே நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விடமாட்டார்கள்! நீயும் போய்ப் படு" என்று மட்டுமே வார்த்தைகள் வந்தன அவரிடமிருந்து.
1967ல் திமுகவினர் "கல்லூரி மாணவன் சீனுவாசனிடம் படிக்காத காமராஜர் தோற்றுப்போனார் "என்று போஸ்டர் அடித்தார்கள். பெரியார்," படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனுவாசன் வென்றார்!" என்று பதில் போஸ்டர் ஒட்டினார். அரசாங்க பணத்தை விளம்பரங்களுக்கு செலவு செய்ய மாட்டேன் என்று மறுத்த அதிசய மனிதரின் நினைவு நாளான இன்று (அக்டோபர் 2) அறம் சார்ந்த அரசியலை கொஞ்சமாவது ஞாபகப்படுத்தட்டும்!
Thanks Hindu News